yuvan-2

முஸ்லீமாக மாறிய காரணம் என்ன…?

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் ஏன் முஸ்லீம் மதத்திற்கு மாறினேன் என்பது பற்றி ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் இருந்து சில பகுதிகள் :

“என் அப்பாவும், அம்மாவும் தீவிர கடவுள் பக்தி உள்ளவர்கள். வீட்டில் சும்மா கண்ணாடி விழுந்து உடைந்தால்கூட ஐயர்களை அழைத்து பூஜை செய்வார் என் அப்பா. ஆனால்  சிறு வயதிலிருந்தே எனக்குள் ஒரு கேள்வி உண்டு.. இந்த உலகத்தை  ஆட்டுவிக்கும் எல்லாவற்றுக்கும் மேலான அந்தக் கடவுள் எப்படியான உருவத்தில் இருப்பார் என்பதுதான் அது..! அந்தத் தேடல் என் அம்மாவின் மரணத்தின்போது வேறுவிதமா எனக்கு உணர்த்தியது..

ஒரு நாள் நான் மும்பையிலிருந்து சென்னை திரும்பியபோது வீட்டில் என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் அதிகமாக இரும தொடங்கினார்.. நானும், என் தங்கையும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். நான்தான் காரை ஓட்டினேன்.. மருத்துமனையை அடைந்தபோது என் பக்கத்தில் இருந்த அம்மாவின் கையைப் பிடித்தபடியே இருந்த நிலையில்… என் அம்மா என் கண்ணெதெரிலேயே உயிர் துறந்தார். நான் கதறியழுதேன்.. சில நொடிகளுக்கு முன் உயிருடன் இருந்தவர் இப்போது இல்லை… அவரது ஆத்மா எங்கே போயிருக்கும் என்று அப்போதே நினைத்தேன்.

அதற்கான பதிலை நான் தேடிக் கொண்டிருக்கும்போது அல்லாவிடம் இருந்து எனக்கு நேரடியாகவே அழைப்பு வந்தது.. அதுவொரு இனிமையான அனுபவம். எனது நெருங்கிய நண்பர் மெக்காவில் இருந்து அப்போதுதான் திரும்பியவர், தொழுகை செய்யும் விரிப்பை எனக்கு பரிசாகக் கொடுத்தார்… அவர் மெக்கா சென்றிருந்தபோது அங்கிருந்து கொண்டு வந்தது என்றும் இது ‘மெக்காவை தொட்ட தொழுகை பாய்’ என்றும் சொன்னார்… “எப்போதெல்லாம் மனக்கஷ்டமா இருக்கியோ, அப்போது இதன் மேல் அமர்ந்து கொள். மனம் சாந்தியாகும்…” என்றார்.  அவர் கொடுத்த அந்த தொழுகை பாயை, அப்போதைக்கு சுருட்டி என் அறையில் ஒரு மூலையில் வைத்துவிட்டு அதைப் பற்றி மறந்தும்விட்டேன்.

அதன் பின் 2002-ம் ஆண்டில் ஒரு நாள்.. என் தாய் பற்றி எனது உறவினருடன் பேசினேன். சட்டென்று எனது அம்மாவின் நினைவுகள் வர அழுது கொண்டே எனது அறைக்கு திரும்பினேன். அப்போது அந்த தொழுகை விரிப்பை மறுபடியும் பார்த்தேன்… அதுவரை அது அங்கிருந்ததையே மறந்திருந்தேன். அன்றைக்கு அதைப் பார்த்தவுடன் ஏதோ தோணியது.. அதை விரித்து அதன் மேல் அமர்ந்து ‘கடவுளே என் பாவங்களை மன்னித்தருளும்’ என்றேன். அந்த கணமே என் மனபாரம் குறைந்து லேசானதை போல உணர்ந்தேன், அதன் பின் குரானையும் மொழி பெயர்ப்புகளையும் தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தேன்… தொடர்ந்து இஸ்லாத்தை பின்பற்ற ஆரம்பித்தேன்… 2014 ஜனவரி மாதத்தில் தொழுகை செய்வதையும் கற்றுக் கொண்டேன்.

தற்போது ‘யுவன்சங்கர் ராஜா’ என்ற பெயரிலேயே திரைப்படங்களில் நான் பிரபலமாக இருப்பதால் உடனடியாக பாஸ்போர்ட் உட்பட்ட ஆவணங்களில் எனது பெயரை மாற்றப் போவதில்லை. பின்பு மாற்றிக் கொள்ளலாம் என்று எண்ணியிருக்கிறேன்..

கடைசியாத்தான் அப்பாவிடம் இது பற்றிச் சொன்னேன். அப்பா, “யுவன்.. நீ இஸ்லாத்துக்கு மாறுவது எனக்குப் பிடிக்கலை” என்று மட்டுமே சொன்னார். எனது அண்ணனும், அண்ணன் மனைவியும் இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

நான்  தொழுகை செய்யும் நேரங்களில் எனது அம்மாவே என் கையைப் பிடித்து, ‘யுவன் நீ தனிமைல இருக்குற.. இஸ்லாம் என்ற மரத்தின் கீழ நீ இருக்கணும்னு நான் விரும்புறேன்’னு சொல்வதா உணர்றேன்..” என்கிறார் யுவன் சங்கர் ராஜா.

மன அமைதி யாருக்கு எங்கிருந்து கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்..! இங்காவது யுவனுக்கு சாந்தி கிட்டட்டும்..!

 

One comment

  1. Salam. Interesting messages. Appreciate the efforts.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news