p60

தென்னைநார்க் கட்டி..! – பட்டையைக் கிளப்பும் பணம்தரும் நுட்பம்!

தென்னைநார்க் கட்டி..! – பட்டையைக் கிளப்பும் பணம்தரும் நுட்பம்!

 

ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.விக்னேஸ்வரன்

 ‘அணில் தாண்டா தென்னை ஆயிரம் உள்ளவன், அரசனுக்குச் சமம்’ என்று தென்னை விவசாயத்தைப் பற்றிப் பெருமையாகச் சொல்வார்கள். கற்பக விருட்சம்போலத் தென்னையின் அனைத்துப் பாகங்களும் பலன் கொடுப்பதால்தான் தென்னைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. இளநீர், தேங்காய், எண்ணெய், பதநீர், கருப்பட்டி, தென்னங்கீற்று, சீமார், பிண்ணாக்கு, நார்… எனத் தென்னையில் கிடைக்கும் பொருள்களையும் அவற்றின்மூலம் தயாரிக்கப்படும் பொருள்களையும் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

அவற்றில் வீணென்று கருதிக் கொட்டப்பட்ட தென்னை நார்க்கழிவுக்கும், இப்போது நல்ல விலை கிடைக்க ஆரம்பித்துள்ளது. அக்கழிவுமூலம் ‘காயர் பித்’ (Coir Pith) தயாரிக்கும் தொழில், கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்துவருகிறது. குறிப்பாகப் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டைப் பகுதிகளில் இத்தொழில் படு மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

இந்தக் காயர் பித் வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேவை அதிகமிருப்பதால், விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் காயர் பித் உற்பத்தியில் இறங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர்தான் கோயம்புத்தூர் மாவட்டம், செஞ்சேரிமலை அடுத்துள்ள வங்கப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன்.

ஒரு காலைவேளையில் தொழிற்சாலையில் பணிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த ஜெகதீசனைச் சந்தித்தோம். “நாங்க பரம்பரை பரம்பரையா விவசாயம் செஞ்சிட்டிருக்கோம். அப்பாசு.கோவிந்தசாமி. தமிழ்நாட்டில் முதன்முதலாக விவசாயச் சங்கத்தைத் தொடங்கியவரும், இலவச கரன்ட்டுக்காக போராடினவருமான நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயச் சங்கத்தில் சுல்தான்பேட்டை வட்டாரத் தலைவராக இருந்தார். ‘பசுமை விகடன்’ புத்தகத்தோட தீவிர வாசகர்.

மூணு வருஷத்துக்கு முன்னாடி அப்பா காலமாயிட்டார். எங்க குடும்பத்துக்கு 35 ஏக்கர் தென்னந்தோப்பு இருக்கு. நான் காலேஜ் முடிச்சுட்டு விவசாயத்துக்கு வந்துட்டேன். தம்பிகள் இரண்டுபேரும் வெளியூர்ல வேலை பார்க்கிறாங்க.
நானும் அப்பாவும் வருஷா வருஷம் கோயம்புத்தூர்ல நடக்கிற விவசாயக் கண்காட்சிக்குப் போவோம். அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி அந்தக் கண்காட்சிக்குப் போயிருந்தப்ப, மத்தியத் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பா ஸ்டால் போட்டிருந்தாங்க. அங்க, தென்னை நார்க்கயிறு, அலங்காரப் பொருள்கள், மிதியடிகள், காயர் பித்னு பல பொருள்களுக்கான தொழில் வாய்ப்புப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டோம். இதோடு அதற்கான இயந்திரங்களையும் காட்சிக்கு வெச்சிருந்ததைப் பார்த்தோம்.

அதுக்கப்புறம்தான் எனக்குத் தென்னைநார்த் தொழிற்சாலை தொடங்குற யோசனை வந்துச்சு. அப்பாவுக்கும் அது பிடிச்சிருந்துச்சு. தோப்புலயே ஓர் இடத்தை ஒதுக்கித் தொழிற்சாலை அமைச்சோம். அதை அமைச்சு இப்போ அஞ்சு வருஷமாச்சு. ஆரம்பத்துல மஞ்சி உற்பத்தி செஞ்சோம். அதுக்கு நல்ல ஆர்டர் கிடைச்சது. ஒரு ஏஜன்ட் எங்ககிட்ட வாங்கி, சீனா நாட்டுக்கு அனுப்பிட்டிருக்கார்.

அதுக்கு அடுத்த கட்டமாத்தான் காயர் பித் தயாரிப்புல இறங்கினோம்” என்ற ஜெகதீசன் தொழிற்சாலையைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

“தேங்காய் உரிச்ச பிறகு கிடைக்கிற மட்டைகளை இயந்திரத்துல அரைச்சா மஞ்சி கிடைக்கும். அதைத் திரிச்சுதான் கயிறு உற்பத்தி செய்வாங்க. மட்டைகளை அரைக்கும்போது, கழிவுத்துகள்களும் வெளியாகும். முன்னாடி அதை எதுக்கும் பயன்படாத பொருளாகத்தான் பார்த்தாங்க. மொத்தமாகக் கொட்டி வெச்சுத் தீ வெச்சுடுவாங்க.

சிலர் அதை எடுத்துட்டுப் போய் நிலத்துல கொட்டிப் பரப்பி விடுவாங்க. அந்த வீணான குப்பைதான், இப்போ பொன் முட்டையிடுற வாத்தா மாறியிருக்கு. அந்த நார்க்கழிவை விவசாயத்துல பல விதங்களில் பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க. மாடித்தோட்டம், நர்சரி, மண்ணில்லா விவசாயம்னு எல்லாத்துக்கும் தென்னை நார்க்கழிவு பயன்படுது. இஸ்ரேல், நெதர்லாந்து, அரபு நாடுகள்னு நிறைய ஏற்றுமதி வாய்ப்பும் இருக்கு.

நிறையத் தேவை இருக்குறதால பல இடங்களுக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை வந்தது. அப்படியே நார்க்கழிவா லாரியில் ஏத்தி அனுப்புறப்போ இடத்தை அடைச்சுக்கும். கொண்டு போறப்ப காத்துல பறக்கும். இது மாதிரியான சிக்கல்களைத் தீர்க்கிற மாதிரிதான் அதைக் கட்டியா (நார்க்கட்டி) மாத்துற தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிச்சாங்க. நானும் அதுக்கான இயந்திரங்களை வாங்கிக் கட்டியாக்கி விற்பனை செஞ்சிட்டிருக்கேன். இப்போ, காயர் பித் தயாரிக்கிற தொழிற்சாலைகள் எக்கச்சக்கமா பெருகிடுச்சு. அந்தளவுக்கு விற்பனை வாய்ப்பும் இருக்கு. இதை அமைக்க பேங்க் லோனும் கிடைக்கிது.

மாசத்துல 20 நாள்களுக்குத்தான் வேலையிருக்கும், வருஷத்துல நல்லா வெயில் அடிக்குற ஆறு மாசம்தான் தென்னை நார்க்கட்டியை தயாரிக்க முடியும்.இப்போதைக்குத் தினமும் 10 டன் அளவுக்குக் காயர் பித் (2,000 கட்டிகள்) உற்பத்தி செய்றேன். ஒரு காயர் பித் 70 ரூபாய்னு விற்பனை செய்றேன். ஏஜன்ட் கமிஷன், போக்குவரத்து, வங்கித்தவணை, கரன்ட்னு எல்லா செலவும் போகத் தினமும் 8,000 ரூபாய் அளவுக்கு லாபமா நிக்கிது” என்ற ஜெகதீசன் நிறைவாக,

“வெயில் காலத்துல உற்பத்தி அதிகமா இருக்கும். மழைக்காலம் வந்தா காய வைக்க முடியாதுங்கிறதால உற்பத்தி இருக்காது. இப்போ மழைக் காலங்கள்லயும் உலர்கலன் பயன்படுத்திக் காய வைக்கிற தொழில்நுட்பத்துல உற்பத்தி செய்லாம்னு இருக்கேன். முன்னாடி தென்னை விவசாயம் மட்டும்தான் செய்திட்டிருந்தேன். இப்போ இதையும் கூடுதல் தொழிலா செய்றதால வருமானம்  அதிகரிச்சிருக்கு.

நான் விவசாயத்துக்கு வந்ததுக்குக் காரணமே பசுமை விகடன்தான். விவசாயத்துக்கு வந்ததாலதான் நான் இப்போ, தொழிலதிபரா மாறியிருக்கேன். இல்லாட்டி எங்கேயாவது வேலைக்குத்தான் போயிருப்பேன். அதனால, பசுமை விகடனுக்குதான் நான் நன்றி சொல்லணும். அடுத்து மண்புழு உரம், பஞ்சகவ்யா,  உயிர் உரங்கள் கலந்து செறிவூட்டப்பட்ட காயர் பித் தயாரிக்கிற யோசனையும் இருக்கு” என்று சொல்லி நம்பிக்கையுடன் விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
கோ.ஜெகதீசன்,
செல்போன்: 98655 55267.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news